February 23, 2025

5. ஆனாய நாயனார்

மழவநாட்டின் ஒரு பகுதியான திருமங்கலம், லால்குடி அருகே உள்ள ஊர். அவ்வூரில் இடையர்- ஆயர்கள் குலத்தில் பிறந்தவர் ஆனாயர். அவர் ஆநிரைகளை ஊரை அடுத்த காட்டுப் பகுதிக்கு கூட்டிச்சென்று மிருகங்களிடமிருந்து பாதுகாத்து பச்சைப் புல் வெளியில் மேய விட்டு, நல்ல நீர் பருகச் செய்து, கண்ணும் கருத்துமாக மாடுகளைக் காக்கும் பணியை செவ்வனே செய்து வந்தார். அப்போது எம்பெருமானை புல்லாங்குழல் இசையால் மகிழ்வித்து தானும் இன்புறுவார்.

உள்ளம் ஒன்றிய இசையால் பெருமானோடு தினமும் ஒன்றிப்போவார் ஆனாயர். தினமும் ஆநிரைப்பணியும் குழல் வழிபாடும் இனிது நடந்தது. ஒருநாள் கொன்றை மரம் ஒன்றைப் பார்த்து அவ்விடம் சென்றார். கொன்றைமலர் ஐந்து இதழ்களைக் கொண்டது. அதன்மேலிருக்கும் மலர்குழல் ஓங்காரம் போலிருக்கும். அது கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கியிருப்பதை பார்த்த ஆனாயர் அந்த மரத்தை சிவமாகக் கருதினார்.

தான் சிவமாக கருதிய கொன்றை மரத்தின் முன் நின்று ஒன்றிய மனத்துடன் தன் அன்பையும் இசையையும் இணைத்து மடைதிறந்த வெள்ளம்போல் புல்லாங்குழலால் ஐந்தெழுத்தை வைத்து இசைத்தார். அப்பகுதி எங்கும் இசை வெள்ளம் பரவியது. வலியவரும் மெலியவரும் தம் முன் பகை விடுத்து அன்புடன் நட்பு பாராட்டியது. அப்பகுதி உயிரினங்கள் தன்னை மறந்தன. அந்த இசை எம்பெருமான் செவி அருகேயே செல்ல பெருமான் விடைமீதேறி அவ்விடம் வந்து சேர்ந்தார். “இந்நிலையிலேயே நம் உலகை அடைவாய் அங்கும் உன் குழல் ஒலிக்கட்டும்” என அருள் செய்தார்.

இறைவன்: நீள்நெறி நாதர்


இறைவி : ஞானாம்பிகை


தலமரம் : குருந்தை


தீர்த்தம் : ஓமகம்


குலம் : இடையர்


அவதாரத் தலம் : திருமங்கலம்


முக்தி தலம் : திருமங்கலம்


செய்த தொண்டு : தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்


குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : கார்த்திகை ஹஸ்தம்

முகவரி : அருள்மிகு. சாமவேதீஸ்வரர் திருக்கோயில், திருமங்கலம் (லால்குடி வழி)– 621601. திருச்சி மாவட்டம்.