April 5, 2025

10. உருத்திர பசுபதி நாயனார்

உருத்திர பசுபதி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். பொன்னி நதியால் வளம் சிறந்து விளங்கும் சோழ நாட்டில் தலைசிறந்து விளங்கும் ஓரூர் திருத்தலையூர். இத்திருத்தலையூரிலே அந்தணர் குலத்திலே பசுபதியார் என்னும் பெரியார் அவதரித்தார். இவர் சிவபெருமானது திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ் செல்வமெனக் கொண்டிருந்தார். ரிக் யஜுர் சாமம் அதர்வன என்ற நான்கில் அதர்வன மற்ற மூன்றின் தொகுப்பு. அதனால் வேதம் ‘த்ரயா’ என்பர். மூன்றினுள் நடுவனவாய் இருப்பது யஜுர் வேதமாகும். அது ஏழு காண்டங்களை உடையது. அதன் மையத்துள் உள்ள காண்டத்துள் 11 அனுவாகங்களை உடையது திரு உருத்திரம் என்பது. அது 101 வரிகளை உடையது. 51 வரியில் ‘சிவாய’ “சிவதரய” என்று திரு ஐந்தெழுத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பாகும். சிவ பஞ்சாட்சரம் வேதத்தின் இதயம் எனப்படும். இவ்வன்புச் செல்வத்தால் ஸ்ரீ உருத்திர மந்திரத்தைக் காதலித்தோதி வந்தார். இவர் தொடர்ந்து சில நாட்கள் தாமரைத் தடாகத்திலே கழுத்தளவு தண்ணீரில் இரவு பகலாக நின்று கொண்டு இருகைகளையும் தலைமேற் குவித்துச் சிவனை மறவாத சிந்தையராய் அருமறையாகியப் பயனாகிய திருவுருத்திரத்தை வழுவாது ஓதும் நியதியுடையவராய் இருந்தார். இவர் தம் அருந்தவப் பெருமையையும் வேதமந்திர நியதியின் மிகுதியையும் விரும்பிய இறைவர் இந்நாயனாருக்கு தீதிலாச் சிவலோக வாழ்வினை நல்கியருளினார்.

குலம் : அந்தணர்


அவதாரத் தலம் : திருத்தலையூர்


முக்தி தலம் : திருத்தலையூர்


செய்த தொண்டு : சிவ வழிபாடு


முகவரி : அருள்மிகு உருத்திரபசுபதி நாயனார் திருக்கோயில், காரைக்கால் சாலை, கொல்லுமாங்குடி, திருத்தலையூர் – 609403. நாகை மாவட்டம்.