இராமநாதபுரம் பரமக்குடியிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் மைல் தொலைவில் உள்ள ஊர் இளையான்குடி. வேளாளார் குலத்தில் பிறந்து விவசாயம் மேற்கொண்டு வந்தார். மிகுந்தச் செல்வந்தராய் இருந்தார் இளையான்குடி மாறன். இறைவன் மேலும் அவரின் அடியார்கள் பாலும் அளவிலாத அன்பு கொண்டவர். அன்னம் பாலிப்பு செய்வதை தன் பெருந்தொண்டாக கருதினார். ஆண்டவன் வழிபாடு ஆராதனை. அடியவர் வழிபாடு சமாராதனை என்பர். வெளியில் வந்து பாதையில் நடப்பவர் யாராயினும் அடியவராக கருதி வழிபட்டு அமுது படைப்பார். அறுசுவை உணவு தயாரித்து அடியார் விரும்பும் உணவை பரிமாறி மகிழ்ந்து மகேசுவர வழிபாடு செய்து வந்தார்.
பெருமான் தம் அடியவர்கள் செல்வம் போய் தான் உண்ணாது வாழ்ந்தாலும் தங்கள் கொள்கையை விடமால் அடியவர்க்கு அமுது படைப்பார்கள் என்பதனை உலகுக்கு மாற நாயனார் மூலம் எடுத்துரைக்க விரும்பினார். மாறன் வறுமையுற்றார். செல்வ வளம் சுருங்கியது. அவரின் மனம் சுருங்கவில்லை. கடன் பெற்றும் சொத்துக்ளை அடமானம் வைத்தும் தொண்டு செய்துவந்தார்.
தில்லையிலிருந்து அந்தணர் வடிவில் புறப்பட்ட பெருமான் மாரிக்காலத்து இரவில் மாறன் வீடு வந்து சேர்ந்தார். அங்கு மாறனும் அவர் துணைவியரும் உணவு உண்ணாமல் படுத்திருந்தார்கள். மழையில் நனைந்தபடியே வந்த அடியாரை வரவேற்று ஈரமேனியைப் போக்க உதவினர். மாறன் நெஞ்சிலே ஈரம் கசிந்தது. மனைவியிடம் அடியவரின் பசியைப் போக்க என்ன செய்யலாம் என ஆலோசித்தார். அவர் மனைவி, கணவரிடம் இன்று நம் சிறுவயலில் விடுத்த செந்நெல்லை எடுத்து வந்தால் அதைக் கொண்டு அமுது படைக்கலாம் என்றார்,
நாயனார் வயல் வெளிக்குச் சென்று அன்று விதைத்த முளை நெல் மழையினால் மிதப்பதை ஒன்று சேர்த்து கொண்டுவந்து மனைவியிடம் கொடுக்க அதை அவர் சமைக்க மழையினால் விறகு ஈரமாக இருப்பதை கணவருக்கு உணர்த்த அவர் வீட்டின் விட்டத்தை எடுத்து ஒடித்து கொடுத்தார். வீட்டின் பின்புறம் உள்ள குழிநிரம்பாத குறும் பயிரான கீரையைக் கொணர்ந்தார் மழையில் நனைந்தவாறே. இவற்றையெல்லாம் வந்த அடியரின் பசியைப் போக்க சுவை உணவாக மாற்றிய அம்மையார் தம் கணவரிடம் அடியவரை அமுது உண்ண அழைத்தார்.
அடியவர் மறைந்தார் அங்கு ஓர் சோதி தெரிய இருவரும் திகைத்து நின்றனர். அப்போது ‘நீயும் நின் துணைவியும் என் பெரும் பதத்தை எய்திக் குபேரன் உம் ஏவல்வழிச் செயல்பட ஆணை பிறப்பித்தோம்’ என அருள் செய்தார்.
இறைவன்: இராசேந்திர சோழீஸ்வரர்
இறைவி : ஞானாம்பிகை
குலம் : வேளாளர்
அவதாரத் தலம் : இளையான்குடி
முக்தி தலம் : இளையான்குடி
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆவணி, மகம்
முகவரி : அருள்மிகு நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் – 608001. கடலூர் மாவட்டம்.
More Stories
13. ஏனாதிநாத நாயனார்
12. ஏயர்கோன் கலிக்காம நாயனார்
11. எறிபத்த நாயனார்