February 23, 2025

13. ஏனாதிநாத நாயனார்

கும்பகோணத்திற்கு தென் கிழக்கில் 6 கி.மீ. தொலைவில் உள்ள எயினனூர் தற்போது ஏனநல்லூர் என்ற ஊரிலே ஏனாதிநாதர் பிறந்தார். ஏனாதி என்றால் படைத்தளபதி என்றாகும். மன்னர்களுக்கு போர் பயிற்சி தரும் பணியை மேற்கொண்டார் ஏனாதிநாதர். அதில் வரும் வருமானத்தைக் கொண்டு அடியவர்கட்கு வேண்டியவற்றை வழங்கி வழிபடுவது அவர் கொள்கையாகும்.

ஏனாதிநாதர் வாள் வலிமையும், தோள் வலியும் அஞ்சா நெஞ்சமும் உடையவராய் திகழ்ந்தார். ஊரில் வாட்படைப் பயிற்சிக்கூடம் அமைத்துப் பயிற்சி கொடுத்து வந்தார். திறமையான பயிற்சியால் செல்வமும் செல்வாக்கும் பெருகியது. அவர் பெற்ற செல்வம் எல்லாம் அடியவர்கட்கே பயன் பட்டது. அவர் புகழ் அதிகரித்தது. பகைவர்கள் உட்பட அனைவரும் அவர் திறமையைப் புகழ்ந்தார்கள்.

அவ்வூரில் வாழ்ந்த வாட்பயிற்சி தரும் அதிசுரன் அவர்மேல் அழுக்காறு கொண்டான். அவனது திறமையின்மையால் அவனால் பெயர் பெற முடிவில்லை என்பதை உணர முடியாதவன் ஏனாதி நாதர்மேல் பொறாமை கொண்டான். ஒருநாள் அதிசூரன் ஏனாதிநாதர் இருக்கும் இடம் தேடிவந்தான். நான் பயிற்றுவித்தவரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன், நீங்கள் பயிற்றுவித்தோரைக் கூட்டிக் கொண்டு வாருங்கள். இருவரும் சண்டை யிடுவோம். யார் வெற்றி பெறுகிறோமோ அவரே இனி இவ்வூரில் பயிற்சி கொடுக்க வேண்டும் என்றார். அதற்கு ஏனாதி நாதரும் உடன்பட குறித்த நாளில் போர் தொடங்கியது. ரத்தக் களாமாகிய இடத்திலிருந்து அதிசூரன் ஆட்கள் ஒடி ஒளிந்தனர்.

தோற்ற அதிசூரன் போரில் ஏனாதிநாதரை வெல்வது கடினம் என உணர்ந்தான். வஞ்சனையால் வெல்ல நினைத்தான். மீண்டும் ஏனாதி நாதரைச் சந்தித்தவன் நம்மால் ஏன் பலர் மடியவேண்டும். நாமிருவரும் வாட்போர் செய்யலாம். வெற்றி பெற்றவர் பயிற்சி சொல்லித்தரலாம் என்றார். அதற்கு இசைந்தார் ஏனாதிநாதர். போர் குறிப்பிட்ட நாளில் நடந்தது.

தோற்கும் நிலையடைந்த அதிசூரன் தான் திட்டமிட்டபடி தன் நெற்றியில் உள்ள திருநீற்றை மறைத்திருந்த மறைப்பை விலக்க, நெற்றியில் திருநீற்றை கண்ட ஏனாதிநாதர் அடியவரைக் கொல்வதா என வாளை எறிந்துவிட எண்ணினார். அதனால் சண்டையிடுவதுபோல் பாசாங்கு செய்தார். அதிசூரன் தன் எண்ணத்தை நிறைவேற்ற மண்ணில் சாய்ந்தார்.

நெற்றியில் திருநீறு கண்டமைக்காக அடியவர் என நினைத்து கொல்லாமை தவிர்த்து தன் உயிரைக் கொடுத்த ஏனாதிநாதருக்கு அருள் வெளியில் பெருமான் காட்சி கொடுத்து அருளினார்.

இறைவன்: பிரமபுரீஸ்வரர்


இறைவி : கற்பகாம்பாள்


குலம் : ஈழக்குலச்சான்றோர்


அவதாரத் தலம் : ஏனநல்லூர்


முக்தி தலம் : ஏனநல்லூர்


செய்த தொண்டு : அடியார் வழிபாடு


குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : புரட்டாசி – உத்திராடம்


முகவரி : அருள்மிகு பிரமபுரீஸ்வரர் திருக்கோயில், எனநல்லூர் (மருதநல்லூர் வழி) – 612402. கும்பகோணம் வட்டம்.