May 6, 2025

25. குலச்சிறை நாயனார்

புகழ்பெரும் சிறப்புடைய பாண்டிநாட்டின் வளம்பல பெருக்கிய ஓர் ஊர் மணமேற்குடி. இவ்வூரினது தலைவராகத் திகழ்ந்தவர் குலச்சிறையார். திருத்தொண்டிற் சிறந்த இத்தொண்டர் சிவனடியார்களை முத்திகாரணர் எனத் துணிந்தவர். ஆதலால் சிவனடியார்களிடத்து மிகுந்த வாரப்பாடு உடையவராயிருந்தார். சிவனடியாரேயெனினும் அவர்தம் குலநலம் பாராது கும்பிடுவார். நல்லவர் தீயவரென நாடாது பணிந்து வணங்குவார். ஒருவராய் வரினும் பலராய் வரினும் எதிர்கொண்டு வரவேற்று இன்னமுது ஊட்டுவார். திருநீறும், உருத்திராக்கமும் அணிந்தவரும் அஞ்செழுத்தோதுபவருமான அடியவர் பாதத்தை அவர் வழிபடாத நாளில்லை.

இறைவனைச் சென்றடைய, சிவலிங்கத் திருமேனியை வழிபடுதல், குருவை சிவமாக வழிபடுதல். அடியார்களை சிவமாக வழிபடுதல் என்ற குரு லிங்க சங்கம வழிபாட்டை வகுத்தனர். இதில் சிவனடியார்களை சிவமாக எண்ணி வழிபடும் நெறியில் நின்றவர் குலச்சிறையார்.

பாண்டியநாட்டில் மங்கையர்கரசியார் சைவம் வளர்க்க துணை நின்றார். சம்பந்தர் பெருமானோடு சொந்த ஊரில் சிவ வழிபாடு செய்தார், சொக்கலிங்கப் பெருமானை நாளும் வழிபட்டார்.மதுரை நின்ற சீர் நெடுமாறன் மன்னரிடம் அமைச்சராக இருந்தார். அப்போது மன்னனுக்கு வெப்ப நோய் கண்டு வருந்த குலச்சிறையார் ஞான சம்பந்தரை வரவழைத்து மன்னரை வெப்ப நோயிலிருந்து காப்பாற்றினார்.

அடியார்கள் ஒவ்வொருவராய் வந்தாலும் கூட்டமாக வந்தாலும் அவர்களை வணங்கி அன்பு குறையாமல் வேண்டியன வழங்கி தொண்டாற்றினார். ஆண்டவனைத்தவிர யாரையும் தனியாக பாடாத ஞானசம்பந்தர் குலச்சிறையாரை தம் பதிகத்தில் பாடியுள்ளதே அவரின் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். பெருநம்பி எனப் பெயர் பெற்றார். அமைச்சராக பல்லாண்டு இருந்து அடியவர்களுக்குத் தொண்டு செய்து இறைவன் அடி சேர்ந்தார்.

இறைவன்: ஜெகதீஸ்வரர்


இறைவி : ஜெகத்ரட்சகியம்பாள்


குலம் : மரபறியார்


அவதாரத் தலம் : மணமேற்குடி


முக்தி தலம் : மதுரை


செய்த தொண்டு : குரு வழிபாடு


குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆவணி – அனுஷம்


முகவரி : அருள்மிகு ஜெகதீஸ்வரர் திருக்கோயில், மணமேற்குடி– 614620. புதுக்கோட்டை மாவட்டம்.