வேதங்களைத் தானம், ஈதல், ஏற்றல், என்ற அறுவகைத் தொழிலில் முனைவோர், சத்திய வாழ்விலும், ஒழுக்க நெறியிலும் ஏழு உலகங்களும் போற்றும் மிகச் சிறந்த அந்தணர்கள் வாழும் ஊரான சேய்ஞலூரில் எச்சத்தச்சன்- பவித்திரை தம்பதிகளின் மகனாக விசாரசர்மா பிறந்தார். ஐந்து வயதினிலேயே வேதங்களின் உட்பொருளில் ஈடுபாடு கொண்டார். உள்ளத்தில் இருந்து சிவாகம உணர்வு வெளிப்பட்டது. ஏழு வயதில் உபநயனம் நடந்தது. வேதம் ஓதுப் பயிற்சியில் ஆசிரியர் கூறுமுன் அதன் பொருள் இவருக்கு விளங்கியது.
ஒருநாள் தன் நண்பனுடன் சென்று கொண்டிருந்தார். அங்கு பசுங்கன்றை ஈன்ற பசுவானது ஆயனை முட்டியது. சினம் கொண்ட அவன் அதை பிரம்பால் அடித்தான். அதனைக் காணப் பொறுக்காத விசாரசர்மா பசுவினைக் காத்தார். கருணையில்லாமல் பசுவை அடிக்கின்றாயே. இனிமேல் நானே மேய்க்கின்றேன் என்று தினமும் மேயவைத்து நீர்பருகச் செய்து மாலை அவரவர் இல்லத்தில் சேர்த்தார். பசுக்களும் நிறைய பால் கொடுத்தன. ஆநிரைகளுக்குச் சொந்தக்காரர்கள் மகிழ்வு அடைந்தனர்.
பசுவின் பாலைப் பார்த்ததும் சிவபூஜை செய்ய ஆசை ஏற்பட்டது. அந்த பாலை மணலினால் ஆன சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்தார். அதனால் பால் குறைந்தது பசுக்களின் சொந்தக்காரரர்கள் விசாரசருமர் செய்யும் செயலை வீண் என்று நினைத்தனர். விசாரசருமரின் தந்தையிடம் சென்று மணலில் பாலினை ஊற்றி வீணாக்குகிறான் என்று புகார் தந்தனர். தந்தையார் எச்சத்தன் அனைவரிடமும் மன்னிப்புக் கோரி, தன்னுடைய மகனை கண்டிக்க சென்றார்.
வழக்கம்போல் விசாரசர்மா மாடுமேய்க்கப் புறப்படார். எச்சதத்தன் பின் தொடர்ந்தார். விசாரசர்மா தன்னை மறந்து உலகியல் உணர்வு இன்றி வழிபட்டுக் கொண்டிருந்தார். மலர் பொய்து பால் ஊற்றி வழிபட்டார். சிவபெருமானுக்கு அபிசேகம் செய்ய வைத்திருந்த பொருளை எட்டி உதைத்து சிவாபாராதம் செய்ததை விசாரசருமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே கையில் கிடைத்ததை எடுத்து தந்தையின் கால்களை நோக்கி வீசினார். சிவனருளால் அது மழுவாக மாறி எச்சத்தனின் கால்களை வெட்டியது.
அதனை கண்டுகொள்ளாமல் விசாரசர்மர் சிவபூஜை செய்யத் தொடங்கினார். அவரின் செயலால் சிவபெருமான் உமையோடு தோன்றினார். விசாரசர்மர் அவர்களை வணங்கினார். விசாரசர்மரை தன்னுடைய கணங்களின் தலைவராக்கினார். அத்துடன் சண்டீசன் எனும் பதவியான சிவபெருமானின் ஆடைக்கும், பூசை பொருட்களுக்கும் உரியவரானாக நியமித்தார். “தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக” என்று அவர் தான்சூடியிருந்த கொன்றை மலர்மாலையை விசாரசருமருக்கு சூட்டினார்.
எச்சத்தனும் உயிர்ப்பெற்று சிவபெருமானை அடைந்தார்.
இறைவன்: சத்தியகிரிநாதர் (சேய்ஞ்சலூர்), பாலுகந்தநாதர் (திருஆப்பாடி)
இறைவி : சகிதேவி (சேய்ஞ்சலூர்), பெரியநாயகி (திருஆப்பாடி)
தலமரம் : ஆத்தி
தீர்த்தம் : மண்ணியாறு
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : சேய்ஞ்சலூர்
முக்தி தலம் : திருஆப்பாடி
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : தை – உத்திரம்
முகவரி : அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில், திருஆப்பாடி– 612504. திருவிடைமருதூர்.