April 5, 2025

31. சத்தி நாயனார்

சோழ நாட்டில் வரிஞ்சை ஊரில் வாய்மை வேளாண் குலம் விளங்க அவதரித்தார் சத்தி நாயனார். அவர் சிவனிற்கு ஆட்சி செய்யும் திறத்தினர். யாவரேனும் தம் முன்பு சிவனடியார்களை இகழ்ந்துரைப்பாராயின் அவர்களது நாவினை அரியும் வலுவுடையராதலால் அவர் சத்தியார் எனப் பெயர் பெற்றார்.அடியார் நிந்தனை எனும்பாதகத்தைப் புரிவோரை இம்மையில் தண்டித்தால் அப்பாவம் மறுமையில் தொடராது. அப்படி தண்டிக்காதிருப்பின் செய்த பாவம் ஒன்றுக்கு ஆயிரமாக வளர்ந்து மறுமையிலே துன்புறுத்தும். எனவே அதை முளையிலேயே களைவது நன்று.

அடியார் நிந்தனை செய்பவரை இம்மையிலேயே கருணை கொண்டு தண்டித்து வந்தார் சத்தியர். அடியார்களைப் பழித்து யாரேனும் இகழ்ந்து உரைப்பாரேல் அவர் நாவை குறடாற்பற்றி இழுத்து கத்தியால் அரிவர். அதனால் அவர் சத்தியர் எனப்பட்டார். அன்பினாற் செய்யும் இந்த அரிய ஆண்மைத் திருப்பணியைப் பலகாலம் வீரத்தாற் செய்திருந்து சிவன் திருவடி சேர்ந்தனர்.

இறைவன்: வேதபுரீஸ்வரர்


இறைவி : வேதநாயகி


குலம் : வேளாளர்


அவதாரத் தலம் : இரிஞ்சியூர்


முக்தி தலம் : இரிஞ்சியூர்


செய்த தொண்டு : அடியார் வழிபாடு


குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஐப்பசி – பூசம்


முகவரி : அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், இரிஞ்சியூர்– 611109.