April 5, 2025

37. சோமாசிமாற நாயனார்

அம்பர் என்ற ஊரில் மறையவர் குலத்தில் சோமாசிமாறர் பிறந்தார். இவர் சோழநாட்டில் திருவம்பர் என்னும் ஊரிலே அந்தணர் குலத்திலே தோன்றினார். சிவபக்தி உடையவராய்ச் சிவனடியார்களுக்குத் திருவமுதளிக்கும் இயல்புடையவராயிருந்தார். உமையொரு பாகனாகிய சிவபெருமானையே முதல்வன் எனக்கொண்டு போற்றும் வேள்விகள் பலவற்றையும் உலகங்கள் ஏழும் உவப்ப விதிப்படி செய்தார். சோமயாகம் செய்பவரை சோமையாஜி எனக்கூறினர். நாளடைவில் அது சோமாசிமாறர் என்றாயிற்று. எந்தக் குலத்தில் பிறந்தாலும் ஈசனுக்கு அன்பர் என்றால் அவர் நம்மை ஆளும் குருநாதர் எனும் இயல்பினர். சிந்தை தெளிய சிவனின் ஐந்தெழுத்தை ஓதுவார். அடியவர்கள் யாராயினும் அவர்களைப் போற்றி வணங்கினார்.

அடியவர்கள் இறைவனாகவே போற்றத் தக்கவர்கள். அடியார்கள் உள்ளத்தில் எப்போதும் இறைவன் குடியிருக்கின்றான். அடியவர்களுக்குள் ஜாதி, இனம் பார்ப்பது கூடாது. சிவனை அவர்கள் உருவில் கண்டு வணங்க வேண்டும் என்ற கொள்கைதனை சோமாசிறார் கடைபிடித்து வந்தார். நம்பியாரூரர் பால் அன்பு கொண்டு திருவாரூர் அடிக்கடிச் சென்று அவர் திருவடியை வணங்கி வந்தார். அவருக்கு இனிய நண்பரானார். குரு அருளும் திரு அருளும் பெற்று இறைவன் திருவடி நிழலை எய்தினார்.

இறைவன்: பிரமபுரீஸ்வரர்


இறைவி : பூங்குழலம்மை


தலமரம் : புன்னை


தீர்த்தம் : பிரமதீர்த்தம்


குலம் : அந்தணர்


அவதாரத் தலம் : அம்பர்


முக்தி தலம் : திருவாரூர்


செய்த தொண்டு : அடியார் வழிபாடு


குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : வைகாசி – ஆயில்யம்


முகவரி : அருள்மிகு பிரமபுரீஸ்வரர் திருக்கோயில், அம்பல் – 609503.
திருவாரூர் மாவட்டம்.