சீர்காழியில் சிவபாத விருதயர் தன் மனைவி பகவதியுடன் தினமும் தங்களுக்கு சைவநெறி தழைத்திடும் வண்ணம் ஒர் குழந்தை வேண்டுமென பிரார்த்தித்து பெருமான் அருள் புரிய ஆண்குழந்தையை பெற்றனர். குழந்தை வளர்ந்தது.
சம்பந்தர்க்கு ஆண்டுகள் இரண்டு முடிந்தது. நாள் தோறும் சிவபாத இருதயர் தோணிபுரத்தே உள்ள நீர்நிலையில் நீராடி கழுமலநாதனை நித்தமும் வணங்கியபின் தன் இல்லத்தில் உள்ள மற்ற பணிகளைப் பார்ப்பார்.
ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டு நிறையப் பெற்ற பின்னர், ஒரு நாள் காலை, தந்தையாருடன் சீர்காழி திருகோயிலின் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாத இருதயர் மைந்தனைக் கரையில் அமரச்செய்து நீருள் முழ்கி, அகமருடஜெபம் செய்தார். தந்தையைக் காணாமையாலும், முன்னைத்தவம் தலைக்கூடியதாலும் திருத்தோணிச்சிகரம் பார்த்து “அம்மே! அப்பா!” என்று அழைத்தாா். அப்பொழுது, திருத்தோணிபுரபெருமான் உமா தேவியாரோடும் விடைமீதமர்ந்து காட்சி கொடுத்தார். உவமையிலாக் கலை ஞானமும், உணர்வரிய மெய்ஞானமும் கலந்த திருமுலைப்பால் ஊட்டுவாயாக எனப்பெருமான் பணித்தார். அப்படியே, பெருமாட்டியும் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி, உண் அடிசில் என ஊட்டினார். ஞானம் உண்ட பிள்ளையார் சிவஞானச்செல்வராய்த் திகழ்ந்தார்.
சில நாள் கழித்துத் திருக்கோலக்காவிற்கு எழுந்தருளினார். கையினால் தாளம் இட்டு “மடையில் வாளை” என்ற திருப்பதிகம் பாடினார். பாட்டிற்கு உருகும் பரமன், கை நோவுமென்று ஐந்தெழுத்து வரையப்பெற்ற பொற்றாளம் அளித்தருளினார். இவர் பெருமை கேட்ட மக்கள், தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டினர். முதலில் தமது தாய் பிறந்த ஊராகிய திருநனிபள்ளி சென்றாா். பிள்ளையார் பெருமையைக் கேள்வியுற்ற திருநீலகண்ட யாழ்ப்பாணர், தம்முடைய மனைவியோடு சீர்காழிக்கு வந்து தரிசித்தார். அவரது பாடல்களுக்குத் தாம் யாழ் வாசித்தார். அது முதல் பிள்ளையாருடனிருந்து பிள்ளையார் பாடல்களையெல்லாம் யாழில் அமைத்து வாசித்து வரலானார்.
ஞானசம்பந்தரது பெருமையைக் கேள்வியுற்ற திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தரைக் காண்பதற்குச் சீர்காழிக்கு எழுந்தருளினார். பிள்ளையாரும் அவரை எதிர்கொண்டழைத்தார். இருவரும் அருட்கடலும் அன்புக்கடலும் ஆம் எனத் திகழ்ந்தனர். பின்னர், ஞானசம்பந்தர் திருப்பாச்சிலாச்சிராமம் பணிந்து கொல்லிமழவன் மகளைப் பிடித்து நின்ற முயலகன் என்னும் நோயைப் போக்கினார். திருச்செங்கோடு என வழங்கும் திருகொடிமாடச் செங்குன்றூர் சென்ற போது அடியவர்களை விஷஜுரம் பற்றியது. திருநீலகண்டத்திருப்பதிகம் பாடி, அவ்விஷ நோயைப் போக்கினார். பிள்ளையார் பட்டீச்சுரத்தை அடைந்தபோது வெயில் மிகுதியாயிருந்ததால், திருவருளால் சிவபூதம் ஒன்று முத்துப்பந்தல் கொடுத்தது.
பிறகு சம்பந்தர் தருமபுரத்தை அடைந்தார். அங்கு திருநீலகண்டரின் உறவினர்கள் அவரின் யாழிசையால்தான் சம்பந்தரின் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன என்று கூறியதால், சம்பந்தர் திருநீலகண்டர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, யாழில் வாசிக்க முடியாத “மாதர் மடப்பிடி” என்ற பதிகத்தைப் பாடினார். பாடலுக்கு வாசிக்க முடியாத திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழை உடைக்க முயல, சம்பந்தர் தடுத்து தொடர்ந்து தன்னுடன் இருந்து யாழ் வாசிக்க வேண்டும் என்றார். அவரும் அதற்கு சம்மதித்து உடன் சென்றார். திருப்புகலூர் என்னும் தலத்தில் திருநாவுக்கரசரை சந்தித்த சம்பந்தர் அவருடன் வேதாரண்யம் என்னும் தலத்தை அடைந்து அங்கு பலகாலம் அடைக்கப்பட்டிருந்த கோவில் கதவுகளை திறக்க அப்பர் பாடினார். மீண்டும் கதவடைக்க சம்பந்தர் பாடினார். அன்று முதல் கோவில் கதவு திறக்கவும், அடைக்கவும் முடிந்தது.
தொண்டை நாட்டுத் தலங்களை தரிசித்து விட்டு சீர்காழி சென்ற சம்பந்தருக்கு, அவரது பெற்றோர்கள் நம்பியாண்டார் நம்பி என்பவரின் மகளை திருமணம் செய்து வைத்தனர். அந்த திருமணத்தின் முடிவில் இறைவனை வணங்க கோவிலுக்கு சென்ற அனைவரும் அங்கே இறையருளால் சோதியில் கலந்து வீடுபேறு பெற்றனர். 16 வயதே நிரம்பிய திருஞானசம்பந்தர் வைகாசி மாதம் மூல நட்சத்திரமான அன்று இறைவனுடன் கலந்தார். இவர் பாடிய பாடல்கள் சைவத்திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
இறைவன்: பிரமபுரீஸ்வரர்
இறைவி : பெரியநாயகி
தலமரம் : பாரிசாதம்
தீர்த்தம் : பிரமதீர்த்தம்
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : சீர்காழி
முக்தி தலம் : ஆச்சாள்புரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : வைகாசி – மூலம்
முகவரி : அருள்மிகு பிரமபுரீஸ்வரர் திருக்கோயில், சீர்காழி – 609110.
நாகை மாவட்டம்.