April 10, 2025

41. திருநாவுக்கரசு நாயனார்

சோழநாட்டின் திருமுனைப்பாடி பகுதியிலிருந்த கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊரில் வேளாளர் குடியில் புகழனாருக்கும் மாதினியாருக்கும் திலகவதி என்ற மகளும், மருள் நீக்கியார் என்ற மகனும் பிறந்தனர். மருள் நீக்கியார் இளமையில் சைவ சமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மதத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.

திலகவதி பன்னிரண்டு வயதை அடைந்தபோது அப்போதைய வழக்கப்படி அவருக்கு மணமுடிக்க ஏற்பாடுகள் செய்தார். வேளாண் குடித்தலைவரான கலிப்பகையாருக்கு தன் மகளை கொடுக்க இசைந்தாா் புகழனாா். அப்போது வடநாட்டு மன்னன் தமிழகம் நோக்கி படையெடுத்து வருதலை அறிந்த மன்னன் கலிப்பகையாரை சேனைத் தலைவராக்கி வடவரை தடுத்து நிறுத்த அனுப்புனார். சண்டை நீண்ட நாள் நடந்தது. புகழனார் நோய்வாய்பட்டு இறக்க மாதினியாரும் உயிர் துறந்தார். பெற்றோரை இழந்த திலகவதியாரும் மருள் நீக்கியாரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி வாழ்ந்தனர்.

கலிப்பகையார் போர்களத்தில் உயிர் மாண்டார் என்ற செய்தி இவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தந்தையும் தாயும் அவருக்கு என்னை கொடுக்க இசைந்தனர். ஆதலால் என்னுயிரை அவர் உயிரோடு இசைவிப்பேன் என்றதைக் கேட்ட மருள் நீக்கியார் தந்தை தாய்க்குபின் தாயாகிய தமக்கையே நீர் உயிர் துறந்தால் உனக்குமுன் நான் உயிர் துறப்பேன் என்றார். தம்பி சாகச் சகியாது தவ வாழ்வை மேற்கொண்டார் திலகவதியார். இம்பர் மனைத்தவம் புரிந்து தம்பியரை கல்வி கேள்விகளில் சான்றோனாக வளர்த்தார். மருள் நீக்கியார் ஆரூர் அப்பன் எனக்குத் திலகவதி தாயாரைத் தந்தான் என்றார்.

தருமசேனரின் தமக்கையார் திலகவதியார் சிவபக்தராக இருந்தார். அதனால் சமண சமயத்தில் தன்னுடைய தம்பி இணைந்ததை எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிட்டார். அதனால் தருமசேனருக்குக் கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் “கூற்றாயினவாறு விலக்ககலீர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். இப்பாடலால் நோய் தீர்ந்தது. அதன் பிறகு சைவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டார்.

சமண சமயத்தைச் சேர்ந்த மன்னன் மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பலவிதங்களில் துன்புறுத்தினான். அத்துன்பங்களைத் திருநாவுக்கரசர் இறைவன் அருளால் வென்றார். இத்தகைய துன்பங்கள் இழைக்கப்பட்டும், இறைவன் அருளால் மீண்டதைக் “கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே” எனும் நமச்சிவாயப் பதிகத்தில் பதிவு செய்துள்ளார். இறுதியில் மகேந்திர பல்லவனும் சைவ சமயத்தைத் தழுவினான்.

தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார். மேலும் திருஞானசம்பந்தரால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் இறைவனடி கலந்தார்.

இறைவன்: பசுபதீஸ்வரர்


இறைவி : திரிபுரசுந்தரி


குலம் : வேளாளர்


அவதாரத் தலம் : திருவாமூர்


முக்தி தலம் : திருப்புகலூர்


செய்த தொண்டு : சிவ வழிபாடு


குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : சித்திரை – சதயம்

முகவரி : அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்,
திருப்புகலூர் (திருக்கண்ணபுரம் வழி) – 609704. நாகை மாவட்டம்.