திருநீலக்கர் காவிரி நாடாகிய சோழநாட்டில் நன்னிலத்திற்கு கிழக்கே 10கி,மீ தூரத்தில் சாத்தமங்கை என்னும் ஊரில் அந்தணர் குலத்திலே பிறந்தார். அந்த ஊரின் கோவிலுக்கு அயவந்தி என்று பெயர். இவர் வேதத்தின் உள்ளுறையாவது சிவபெருமானையும், சிவனடியார்களையும் அன்பினால் அருச்சித்து வணங்குதலே எனத் தெளிந்து கொண்டார். அதனால் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்து திருப்பணிகளையும் செய்து வந்தார்.
இவ்வாறு ஒழுகும் திருநீலநக்கர் ஒரு நாள் சிவபூசை முடித்துக்கொண்டு சாத்தமங்கையில் அயவந்தி என்னும் கோயிலிலே எழுந்தருளியுள்ள பெருமானை அருச்சிக்க விரும்பினார். பூசைக்கு வேண்டும் பொருட்களைத் தம் மனைவியார் எடுத்துக்கொண்டு உடன்வரத் கோயிலை அடைந்து அயவந்தி ஈசரை முறைப்படி பூசித்து இறைவர் திருமுன் இருந்து திருவைந்தெழுத்தினைச் ஓதினார். அப்பொழுது சிலந்தி ஒன்று அயவந்தி ஈசர் திருமேனியில் விழுந்தது. அதுகண்ட நீலநக்கரின் மனைவியார் விரைந்து சென்று அதனைப்போக்க வாயினால் ஊதித் தள்ளினார்.
நாயனார் அச்செயலைக்கண்டு தன் கண்ணை மறைத்து அறிவிலாதாய்! நீ இவ்வாறு செய்தது ஏன்? என்று சினந்தார். சிலந்தி விழுந்தமையால் ஊதித்துமிந்தேன் என்றார் மனைவியார். நீ சிவலிங்கத்தின் மேல் விழுந்த சிலந்தியை வேறொரு வகையால் விலக்காமல் எச்சில்பட ஊதித்துமிந்தாய். அறிவில்லாமல் நீ இப்படி செய்து இறைவன் மேனியை எச்சில் செய்தாயே என வருந்தி இனி உன்னை நான் துறந்தேன். நீங்கி விடு என்றார். மனைவியரும் அதுகேட்டு அஞ்சி ஒரு பக்கம் ஒதுங்கினார்.
நீலநக்கர் பூசையை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினார். மனைவியார் அவருடன் வீடு செல்ல அஞ்சி ஆலயத்தில் தங்கியிருந்தார். அன்று இரவு நீலநக்கர் துயிலும் பொழுது அயவந்திப் பெருமான் கனவில் தோன்றித் தம் திருமேனியைக் காட்டி உன் மனைவி ஊதித்துமிந்த இடம் தவிர மற்றைய எல்லா இடங்களிலும் சிலந்தியின் கொப்புளம் என்று அருளினார். நீலநக்கர் வணங்கி விழித்தெழுந்து ஆடிப்பாடி இறைவனது திருவருளை வியந்து உள்ளமுருகினார். விடிந்தபின் ஆலயத்திற்குச் சென்று இறைவனை இறைஞ்சி மனைவியாரையும் உடனழைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினார்.
ஞானசம்பந்த பெருமான் காலத்தவர். அவருடன் நெருங்கிப் பழகியவர். ஞானசம்பந்தப் பெருமான் திருமணத்தைக் கண்டு களிக்க திருப்பெருமணநல்லூர் அடைந்து திருமணத்தை நடத்திவைத்தார். ஞானசம்பந்த பெருமானோடு திருநல்லூரில் சிவ சோதியில் கலந்து ஐக்கியமானார்.
இறைவன்: அயவந்தீஸ்வரர்
இறைவி : இருமலர்க்கண்ணம்மை
தலமரம் : கொன்றை
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : சீயாத்தமங்கை (திருச்சாத்தமங்கை)
முக்தி தலம் : ஆச்சாள்புரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : வைகாசி – மூலம்
முகவரி : அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில்,
சீயாத்தமங்கை – 609702. நன்னிலம் வட்டம். திருவாரூர் மாவட்டம்.