April 4, 2025

52. புகழ்த்துணை நாயனார்

சோழ நாட்டிலுள்ள அழகாப்புத்தூரில் – செருவிலிபுத்தூரிலே சிவவேதியர் குலத்தில் புகழ்துணையர் பிறந்தார். சிவனது அகத்தடிமைத் தொண்டிற் சிறந்த அவர் சிவபெருமானைத் தத்துவ நெறியியில் சிவாகம விதிப்படி வழிபட்டு வந்தார். ஆகம விதிப்படி பெருமானைப் பூசித்துவந்தார். நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பசிநோயால் வருந்தினாலும் உள்ளம் தளராது இறைவனை நாளும் பூசித்து வந்தார்.

ஒருநாள் சிவலிங்கத் திருமேனிக்கு திருமஞ்சனம் செய்விக்கும்போது பசியின் மிகுதியால் உடலில் சோர்வு ஏற்பட்டு தண்ணீர் குடத்தை தாங்க முடியாமல் இறைவன் திருமுடி மேல் விழுந்தது. வேதனையடைந்து மயங்கி வீழ்ந்தார். அப்படியே மயக்கத்தில் அயர்ந்துவிட்டார். இறைவன் அவர் கனவில் தோன்றி பஞ்சம் நீங்கும் வரை உனக்கு ஓர் காசு நாள்தோறும் வைப்போம் என அருள் செய்தார்.

கண்விழித்தார். இறைவன் கருணையை எண்ணி உருகினார். பீடத்தின் கீழ் ஓர் காசு இருந்தது. அதைக் கொண்டு தினமும் தன்னால் முடிந்த அளவிற்கு தொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.

இறைவன்: சொர்ணபுரீஸ்வரர்

இறைவி : அழகாம்பிகை

தலமரம் : வில்வம்

குலம் : ஆதிசைவர்

அவதாரத் தலம் : அழகாபுத்தூர்

முக்தி தலம் : அழகாபுத்தூர்

செய்த தொண்டு : சிவ வழிபாடு

குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆவணி -ஆயில்யம்

முகவரி : அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், அழகாபுத்தூர் – 612401. கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.