May 6, 2025

53. பூசலார் நாயனார்

தொண்டை நாட்டில் திருநின்றவூரில் மறையவர் குலத்திலே தோன்றியவர் பூசலார் என்னும் பெருந்தகையார். இவர் சிவனடியாராகிய அன்பர்க்கு ஏற்றபணி செய்தலே பிறவிப்பயன் எனக் கொண்டு பொருள்தேடி அடியார்க்கு அளித்து வந்தார். அக வழிபாட்டிலே சிறந்து விளங்கிய சிவ பக்தர். சிவபெருமானுக்கு ஓர் கோவில் கட்ட நினைத்தார். பலரிடம் கேட்டும் நிதி கிடைக்கவில்லை. கோவில் கட்டுவது என்ற தன் முடிவு வீணாகாமல் புறத்தே கட்ட முடியவில்லை என்றாலும் அகத்தே கட்டத் தொடங்கினார்.

தன் மனத்திலே நிதி சேர்த்தார். செங்கல், சுண்ணாம்பு, மரங்கள் எல்லாவற்றையும் நினைத்து மனத்திலே தேடிக்கொண்டார். அடிக்கல் நாட்டுவது முதல் அடுத்தடுத்து கட்டடங்களை தன் மனத்திலே கட்டினார். பல நாட்கள் சிந்தித்து புறக்கோவிலை விட அகக்கோவிலை சிறப்பாக வடிவமைத்தார்.

இதே சமயத்தில் காஞ்சியில் காடவர்கோன் மன்னன் திருக்கோயில் கல்லிலே அமைத்தான். கயிலாயநாதர் கோவில் என்று அழைத்தான். அற்புதமான சிற்ப வேலையும் கலை நுணுக்கமும் கொண்டதாக அமைந்தது கோவில். கோவில் பணிகள் முடிந்ததும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுக்கு நாள் குறித்தான். அதே நாளில் பூசலார் தன் மனக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த எண்ணியிருந்தார்.

அன்று இரவு மன்னன் கனவில் பெருமான் தோன்றி, ’நீ கட்டிய கற்கோவிலுக்கு அன்று நான் வரமுடியாது, என் அன்பிற்கினிய திருநின்றவூர் பூசலார் திருக்கோவிலுக்கு அந்த வேளையில் செல்ல வேண்டி யிருப்பதால் நீ இன்னொரு நாளைக்கு வைத்துக் கொள்’ என்றார்.

கண் விழித்த மன்னவன் பெருமானே வலிந்துபோய் அருள் செய்கின்ற திருக்கோவிலைக் கட்டிய அடியாரை நான் வணங்க வேண்டும் என திருநின்றவூருக்குச் சென்றான். பூசலார் அமைத்த அருள் கோவில் எங்கே என மறையவர்களைக் கேட்டான். அப்படி ஒரு கோவிலும் இல்லை என்றனர். மன்னரே இருங்கள் பூசலாரை வரச்சொல்கிறோம் என்றனர். மன்னவன் பூசலார் இருக்குமிடம் சொல்லுங்கள். அவரை அழைக்ககூடாது. அவர் ஈசனின் அன்பர். அவரை நாம் வணங்க வேண்டும். நான் அங்கு செல்ல வேண்டும் எனக்கேட்டு அங்கு சென்றார்.

அங்கு அருகணைந்தவர்களை நோக்கி, ‘பூசலார் அமைத்த கோயில் எங்கே உள்ளது?’ என்று கேட்டார். அதுகேட்ட நின்றவூர் மக்கள், ‘பூசலார் இவ்வூரிற் கோயில் எதுவும் கட்டவில்லை’ என்றனர். மன்னன் அவ்வூர் மறையவர்களை அழைத்து ‘பூசலார் யார்’ எனக்கேட்டறிந்து, ஆசில் வேதியராகிய அவர் இருக்குமிடத்திற்குத் தானே சென்று அவரை வணங்கி, ‘தேவரீர் அமைத்த திருக்கோயில் யாது? அக்கோயிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்யும் நாள் இந்த நாள் என்று இறைவர் தெரிவித்தருளத் தெரிந்து உம்மைக்கண்டு பணிதற்கு வந்தேன்’ என்றார். பூசலார், அரசன் உரைகேட்டு மருண்டு, ‘இறைவர் என்னையும் பொருளாக அருள்செய்தாராயின் அக்கோயிலின் பெருமை எத்தகையது? என்று தமக்குள்ளேயே சிந்தித்துத் தாம் மனத்தால் முயன்று செய்த திருக்கோயிலின் அமைப்பினை மன்னனுக்கு விளங்க எடுத்துரைத்தார். அரசன் அதிசயித்துப் பூசலாரை நிலமுற்றத் தாழ்ந்து வணங்கித் தனது நகருக்குச் சென்றான். பூசலார் தன் மனக்கோவிலில் உள்ள இறைவனை பலநாட்கள் பேணிச் செய்திருந்து சிவபெருமான் திருவடிநீழலையடைந்தார்.

இறைவன்: இருதயாலீஸ்வரர்

இறைவி : மரகதாம்பிகை

குலம் : அந்தணர்

அவதாரத் தலம் : திருநின்றவூர்

முக்தி தலம் : திருநின்றவூர்

செய்த தொண்டு : சிவ வழிபாடு

குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஐப்பசி – அனுஷம்

முகவரி : அருள்மிகு பூசலார் திருக்கோயில், திருநின்றவூர், சென்னை மாவட்டம்.