April 16, 2025

57. முருக நாயனார்

சோழநாட்டிலே திருவாரூர் அருகே நன்னிலத்தை அடுத்த திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார். ஞானவரம்பின் தலை நின்ற இப்பெருந்தகையார் இறைவன் திருவடிக்கீழ் ஊனமின்றி நிறைஅன்பால் உருகும் மனத்தார். மூன்று வேளையும் இறைவனுக்கு மலர் சூட்டி வழிபாடு செய்து வந்தார். ஞான நெறியில் நிற்பவர். சிவபெருமான் பால் உருகும் மனத்தால் வழிபடும் பண்பினர்.

நால்தோறும் நால்வகை மலர் கொய்து வண்ணவகையாக்கி பெருமானுக்கு அணிவித்து மகிழுவார். இத்தொண்டு செய்வதையே பெரும் புண்ணியமாக நினைத்தார். கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பு, நிலப்பூ என்ற நான்வகை மலர்களால் அறுவகை மாலைகளை தொடுத்து அணிவித்து வழிபடுவது வழக்கம்.

ஞான சம்பந்தரை தம் நண்பராகப் பெற்றார். சிலநாட்கள் ஞான சம்பந்தருடன் கூடிச் சென்று வர்த்தமானீசுவரப் பெருமானை நாளும் வழிபடும் பாக்கியம் பெற்றார். முருகர் பெருமானை அலங்கரித்து தூர நின்று பார்த்துப் பார்த்து மாற்றியமைத்து கண்டு கண்குளிர களிப்பாரம். நாளும் தொண்டு செய்து வந்தவர் ஞான சம்பந்தப் பெருமான் திருமணநாளில் அப்பெருமானோடு திருநல்லூரில் சிவ சோதியில் கலந்தார்.

இறைவன்: அக்னிபுரீஸ்வரர்


இறைவி : கருந்தார்குழலி


தலமரம் : புன்னை


தீர்த்தம் : அக்னி தீர்த்தம்


குலம் : அந்தணர்


அவதாரத் தலம் : திருப்புகலூர்


முக்தி தலம் : ஆச்சாள்புரம்


செய்த தொண்டு : அடியார் வழிபாடு


குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : வைகாசி – மூலம்


முகவரி : அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்,
(திருக்கண்ணபுரம் வழி) – 609704. நாகை மாவட்டம்.