April 13, 2025

59. மூர்க்க நாயனார்

தொண்டைவள நாட்டின் பாலியாற்றின் வடக்கில் சென்னைக்கு அருகிலுள்ள திருவேற்காட்டில் பிறந்தார் மூர்க்கர். அதிற் சிவனடிமைத் திறத்தில் சிறந்து வழிவழி வந்த வேளாண் மரபில் அவதரித்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியில் இடைவிடாமற் கடைப்பிடித்து வந்தார். திருநீற்றை மெய்ப்பொருளாக கருதினார். தன்னை நாடிவரும் அடியார்களுக்கு அமுது படைத்தபின்னரே தான் அமுது உன்னும் பழக்கமுடையவர். ஒவ்வொருநாளும் இப்பணி தொடர அடியவர்கள் நிறைய வர தன் உடைமைகளை விற்று தொண்டு செய்தார். மேலும் விற்பதற்கு ஏதுமில்லாததால் முன்பு அவர் அறிந்திருந்த சூதாட்டத்தின் மூலம் வரும் பெருளைக்கொண்டு அமுதுதொண்டு செய்தார். ஒவ்வொரு திருக்கோவிலுக்கும் சென்று அமுது படைத்தார். ஒவ்வொரு ஊரிலும் சிவனை வழிபட்டு பின் சூதாடி அதனால் வரும் வருவாயை அமுது தொண்டு செய்ய பயன்படுத்தினார்.

குடந்தை நகரம் சென்றார். சூது ஆடி ஈன்ற பொருளில் அடியவர்களுக்கு அமுது ஊட்டி வந்தார். சூதாட்டத்தின் போது இவரை ஏமாற்றினாலோ, தகராறு செய்தாலோ தன்னிடமுள்ளவாளால் குத்திவிடுவதால் மூர்க்கர் என்றனர். சூதாட்டத்தில் வெற்றி பெற்று தனக்கென்று எதையும் இவர் வைக்கவில்லை. மேலும் தான் நல்ல நிலையில் இருக்கும்போது தன் சொத்தை விற்று அமுது படைத்தார். தன் கொள்கை நிறைவேற எடுத்துக் கொண்ட கடைசி வழி. தொண்டுக்கு இடைஞ்சல் என்றால் உயிரைத் தருபவர்கள் அடியார்கள். சூதாடி அதனால் தொண்டு செய்வதால் ஏற்படும் பாவத்தை ஏற்க தயாராக இருந்தார். எல்லோருக்கும் அமுதூட்டி கடைசி ஆளாக மீதம் இருப்பதையே தான் உண்டு தொண்டு செய்து இவ்வுலகை விட்டதற்பின், இறைவரது சிவபுரம் அடைந்தார்.

இறைவன்: வேதபுரீஸ்வரர்


இறைவி : பாலாம்பிகை


தலமரம் : வேலம்


தீர்த்தம் : வேலாயத தீர்த்தம்


குலம் : வேளாளர்


அவதாரத் தலம் : திருவேற்காடு


முக்தி தலம் : கும்பகோணம்


செய்த தொண்டு : அடியார் வழிபாடு


குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : கார்த்திகை – மூலம்


முகவரி : அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு – 600077.
திருவள்ளூர் மாவட்டம்.