திருச்சிற்றம்பலம்
விநாயகர் மலரடி! போற்றி போற்றி!
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந்நாட்டவா்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!
வெற்றி வேல் முருகனே! போற்றி போற்றி!
அம்மை அப்பனே! போற்றி போற்றி!
திருப்பிரமபுரம் திருத்தல வரலாறு:
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி
இத்திருப்பிரமபுரத் திருத்தலமானது சோழவள நாட்டில் காவிரி வடகரையில் அமைந்துள்ள 14ஆவது தலமாகும். நாகை மாவட்டத்தில் சீா்காழி கோட்டத்தின் தலைநகர். மயிலாடுதுறை சிதம்பரம் இருப்புப்பாதையில் இரயில் நிலையம், பேருந்து வசதிகள் உள்ள பெரிய ஊர். பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, சீா்காழி, கொச்சைவயம், கழுமலம் என்ற பன்னிரண்டு திருநாமங்களை உடையது. இவற்றின் பெயர்க் காரணங்களைப் பதிகம் அறுபத்துமூன்றில் திருஞானசம்பந்தர் சுவாமிகளே எடுத்து விளக்கி உள்ளார்கள். அது “பல்பெயர்ப்பத்து’ என அமைக்கப் பெற்றுள்ளது.
தோடுடைய செவியன்விடை
யேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்
உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந்
தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. (1)
பொருள்: அப்பா, எனக்குப் பால் கொடுத்தவள் யார் தெரியுமா?அகிலாண்டகோடி ஆன்மாக்களை ஈன்றும்பின்னையும் கன்னி என மறைகள் பேசுகின்ற உமையம்மை. அவளைத் தன் உடம்பில் இடப்பாகத்தில் வைத்திருக்கிறான் சிவபெருமான். ஆதலால் அவனுடைய இடது திருச்செவியில் தோடு அணிந்திருந்தான். அவன் இடபத்தின்(காளையின்) மீது ஏறி வந்தான். அவன் திருமுடியில் தூய்மையான வெண்ணிற களங்கமில்லாத ஒரு கலைச்சந்திரனைச் சூடி இருந்தான். அவன் உடம்பு முழுவதும் திருவெண்ணீற்றைப் பூசி இருந்தான். நான் தனிமையில் இருந்ததினால் அவன் என் உள்ளத்தில் புகுந்து என்னைக் கொள்ளை கொண்டுள்ள கள்வனாகி விட்டான். பல இதழ்களைக் கொண்ட தாமரை மலரில்வீற்றிருக்கின்ற நான்முகன் என்று சொல்லப்படும் பிரமதேவன் முன்னொரு காலத்தில் தன் படைப்புத் தொழிலை இழந்து விட்டான். அதனை மீண்டும் பெறுவதற்கு இந்தப் பெருமை வாய்ந்த நம் ஊராகிய பிரமபுரத்திற்கு வந்தான். வந்து அவன் இதோ விண்ணில் காட்சி கொடுக்கின்றானே இவனைக்காதலாகிக் கசிந்து, கண்ணீர் மல்கி, வணங்கித், தனது படைப்புத் தொழிலை மீண்டும் தந்தருள வேண்டுமென்று இரங்கினான். அவனுக்கு அருள்புரிந்தவன்தான் இதோ தெரிகின்றானே இந்தப்பெம்மான். அவன் நமது பிரமபுரத்தைத் தனது ஊராகக் கொண்டு அருளாட்சி செய்து வருகிறான். அவன்தான் அப்பா எனக்குப்பாலைக் கொடுக்கச் சொல்ல அம்மை பாலைக்கறந்து, அதில் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதத்தையும் குழைத்து அந்தப் பாலைக் கொடுத்தாள். பால் மிகவும் ருசியாக இருந்தது. வேகமாகக் குடித்தேன். அதனால் கடைவாயில் சிறிது பால் சிந்திவிட்டது. அதோ விண்ணிலே காட்சி அளிக்கின்ற வேத நாயகனான அம்மையப்பரை உமக்குத் தெரியவில்லையா அப்பா? எனக்கு மிக நன்றாகக் காட்சி அருளுகின்றானே! (சிவபாத இருதயர் கண்களுக்கு இறைவன் புலப்படவில்லை).
முற்றலாமையிள நாகமோடேன
முளைக்கொம்பவை பூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென
துள்ளங்கவர் கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல்
கையால்தொழு தேத்தப்
பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. (2)
பொருள்: அப்பா, நான் காண்பிக்கும்அம்மையப்பரை உம் கண்கள் காணவில்லை போலும். இன்னும் ஒருசில அடையாளங்கள் சொல்லுகிறேன். வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும், பன்றியினது கூர்மையான கொம்பினையும் கோர்த்து மாலையாக அணிந்திருக்கிறான். அது மாத்திரமன்று. என்றும் இளமையாக இருக்கின்ற நாகப்பாம்பைத் தன் கழுத்தில் சுற்றி மாலைபோல்அணிந்துள்ளான். தசை நீங்கப் பெற்ற, காய்ந்து போன பிரமனது கபாலத்தில் (மண்டை ஓட்டில்) பிச்சை கேட்டுத் திரிகின்றான். அவன்தான் என்முன் தோன்றி எனது உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட கள்வன் ஆயினான். அவன் எனக்கு அருள்புரிந்தது போல, இறைவன் புகழையே கற்றும், கேட்டும், தெளிந்த சிந்தை உடையராகிய பெரியார்கள் அவன் திருவடிகளைத் தங்கள் கையால் தொழுது வணங்கும் பொழுது அவர்களுக்கும் இடபத்தின்மீதுஅம்மையோடு ஊர்ந்து வந்து அருள்புரிகின்றான். அவன் பிரமபுரமாகிய நமது ஊரை இருப்பிடமாகக் கொண்டு அருள் ஆட்சி செய்து வருகின்றான். இவனுடன் வந்த உமையம்மை தான் எனக்குப் பால் ஊட்டினாள்.
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர்
நிலாவெண் மதிசூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன்
உள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய
ஓரூரிது வென்னப்
பேர்பரந்தபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. (3)
பொருள்: அந்த சிவபிரானைப் பற்றி இன்னும் சொல்லுகிறேன்; கேள். அவனுடைய சிவந்த திருச்சடைமுடி மேல் கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்து உள்ளது. அதே திருச்சடைமுடியில் ஒரே ஒரு கலையை மட்டும் உடைய வெண்மையான பிறைச்சந்திரனையும் சூடி உள்ளான். அழகு மிகுந்த, கூட்டமான, வெண்மையான சங்கு வளையல்கள் என் முன்கையிலிருந்து நழுவி விடும்படியாய் என்னை மெலிவித்தான். அவன் என் முன் தோன்றி என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்ட கள்வனாகி விட்டான். மகா சங்கார காலத்தில் (ஊழிக்காலத்தில் – மகாப்பிரளய காலத்தில்) உலகம் அனைத்திலும் உள்ள எல்லா ஊர்களும் அழிந்து போக பிரமபுரம் மட்டும் அழியாது உலகிற்கே ஒரு வித்தாக புகழோடு இருந்து வருகிறது. ஆதலால் இந்த ஊரை தனது ஊராகக் கொண்டு சிவபெருமான் அருள்புரிந்து வருகிறார். அவனோடு வந்த அம்மை தான் எனக்குப் பால் அடிசில் கொடுத்தாள்.
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி
விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென
துள்ளங்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை
மலிந்தவரை மார்பிற்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய
பெம்மானிவ னன்றே. (4)
பொருள்: அப்பா, எனக்குப் பாலைக் கொடுக்கச் சொன்ன சிவ பெருமானுடைய பெருமையை இன்னும் சொல்லுகிறேன், கேட்பீராக. வித்யுன்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்று மூன்று அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தங்கம், வெள்ளி, இரும்பு இவைகளால் ஆன உலோகக் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு ஆகாயத்தில் மகிழ்ச்சியாகப் பறந்து கொண்டு தேவர்களுக்குத் துன்பம் செய்து வந்தார்கள். தேவர்கள் தங்கள் துன்பத்தை நீக்கக் கோரிச் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். அவன் மேருமலையை வில்லாக்கி வாசுகி என்ற பாம்பை நாணாகக்கொண்டு எய்து இம்மூன்று கோட்டைகளையும் அழித்தான். இன்னும் ஒரு செய்தி சொல்லுகிறேன் கேள். பிரம்மாவுக்கு ஆதியில் ஐந்து தலைகள் இருந்தன. அவன் தனக்கும் ஐந்து தலைகள், சிவனுக்கும் ஐந்து தலைகள். அதனால், சிவனும் தானும் ஒரே சம அந்தஸ்து உடையவர்கள் என்று தருக்கொடுதிரிந்து வந்தான். அதனை அறிந்த சிவபெருமான் தனது நகத்தால் ஒரு தலையைக்கிள்ளி எடுத்து விட்டார். அதன் பிறகு அவன் நான்கு தலைகளை உடைய நான்முகன் என்று விளங்கினான். கிள்ளி எறிந்த அவன் தலை ஓட்டினைப் பிச்சாபாத்திரமாகக் கொண்டு சிவன் பிச்சை எடுப்பவன் போல பாவனை செய்து கொண்டு வந்து எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வனாகி விட்டான். நாகப்பாம்பு மண் தரையில் பொந்து அடித்து மண்ணுக்குள் விருப்பமாக உறையும். அந்தப் பாம்பையும், காற்றிலே அசைந்தாடி மணம் வீசுகின்ற நல்ல அழகான கொன்றை மலர் மாலையையும், தனது மலை போன்ற மார்பில் அணிந்துள்ளான். வேண்டுதல் -வேண்டாமை இல்லாதவன் ஆனபடியால் மாறுபட்ட இந்த இரு பொருள்களை மாலைகளாக அணிந்துள்ளான். அத்தோடு நில்லாமல் உமாதேவியையும் தன் உடம்பின் இடப்பாகத்தில் வைத்துக்கொண்டு இருவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இப்பேர்ப்பட்டவன் நமது பிரமபுரத்தைத் தனது ஊராகக் கொண்டு அருள் புரிந்துவருகின்றான். இவன் ஆணையிட உமையம்மை எனக்குப் பால் கொடுத்தாள்.
ஒருமைபெண்மையுடை யன்சடையன்
விடையூரும்இவ னென்ன
அருமையாகவுரை செய்யஅமர்ந்தென
துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்த
தோர்காலம்இது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. (5)
பொருள்: அப்பா, அவன் பெருமையை இன்னும் சொல்லுகிறேன். அவனுடைய அழகிய திருமேனியிலே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன். இடப்பக்கத்தில் பெண் உருவின் திருமுடியில் பின்னிய சடையையும், வலப்பக்கத்தில் ஆண் உருவின் திருமுடியில் அவிழ்ந்த சடையையும் கொண்டவன். அவன் எப்போது எங்கு சென்றாலும் விடை (காளை)யின் மீது ஊர்ந்து வருபவன். இவ்வாறு எல்லாம் அவனது திருமேனி அழகை, தோழியர் எடுத்துக்கூற, அந்த அழகே உருக்கொண்டு என் முன்னே வந்து தோன்றி எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வன்தான் சிவபெருமான். சர்வ சங்கார காலத்தில், மேகத்தின் கருமை நிறத்தைப் பெற்ற கடல், பொங்கி வந்து உலகம் அனைத்தையும் அழித்தபோது நமது ஊராகிய பிரமபுரம் மட்டும் தோணிபுரமாய் அழியாமல் மிதந்தது. இப்படிப்பட்ட பெருமையை உடைய பிரமபுரத்தில் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகின்றான் நம் சிவபெருமான்.
மறைகலந்தஒலி பாடலோடாடல
ராகிமழு வேந்தி
இறைகலந்தஇன வெள்வளைசோரஎன்
உள்ளங்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர்
சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. (6)
பொருள்: அப்பா, அவன் எப்படிப்பட்ட கள்வன் தெரியுமா? அவன் தன் கையில் மழுஆயுதத்தைப் பிடித்துக்கொண்டும் ஒலி வடிவில் உள்ள வேதத்தைப் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் என் முன்னே வந்து தோன்றி என்னைப் பரவசப்படுத்தினான். எனது உள்ளம் புகுந்து என்னைக் கொள்ளை கொண்டுவிட்ட கள்வன் ஆகிவிட்டான். என் முன் கையில் (மணிக்கட்டில்) உள்ள ஓரின வெண்மை நிறமுடைய சங்கு வளையல்கள் சோர்ந்து நழுவி விழும் நிலையை அடைந்தன. நம்முடைய ஊராகிய பிரமபுரத்து நந்தவனத்தில் மணம் நிறைந்த பூக்களைக்கொண்ட செடிகொடிகள் அடர்ந்து ஓரே இருளாக இருக்கிறது. சோலைகளில் நீண்டு உயர்ந்த மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த இரு இடங்களிலும் சந்திரனது நிலவொளி அங்குமிங்குமாக சிதறிக்கிடக்கின்றது. இத்துணை சிறப்பு உள்ள நமது பிரமபுரத்தில் இருந்து அருளாட்சி செய்கின்ற இறைவன்தான் எனக்குப் பால் கொடுக்க, இறைவியிடம் கூறினான்.
சடைமுயங்குபுன லன்அனலன்எரி
வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்கும்அர வோடுழிதந்தென
துள்ளங்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம்
பொன்னஞ்சிற கன்னம்
பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. (7)
பொருள்: அப்பா சிவனைப்பற்றி இன்னும் சொல்லுகிறேன். சிவனது திருச்சடையில் கங்காதேவி வீற்றிருக்கின்றாள். அவனுடைய நான்கு திருக்கரங்களில் இடது திருக்கரம் ஒன்றில் அனலை (நெருப்பை) வைத்துக் கொண்டுள்ளான். அவன் இடுப்பில் உடுத்தியுள்ள ஆடையைச்சுற்றிப், பாம்பைக் கொண்டு இறுகக் கட்டி உள்ளான். ஊடத்தக்க ஒரு பெண்ணையும், அஞ்சத்தக்க நெருப்பையும், பாம்பையும் உடம்பிலே கொண்டு எரிவீசி நடனமாடித் திரிபவனாயிருக்கின்றான். இவ்வாறு விநோதமான காட்டு உடையவனாய் இருந்தும், அவனுடைய பேரழகும், கருணையும், எல்லா உயிர்களையும் பகை நீக்கி ஆளும் வன்மையும் என் உள்ளத்தைக் கவர்ந்தது. அவ்வாறு கவர்ந்த கன்வன்போகியாய் இருந்து எல்லா உயிர்களுக்கும் போகத்தைப் புரிய வைத்தான். அவன் நமது ஊராகியபிரமபுரத்தை ஏன் விரும்பித் தங்கி அருள் ஆட்சி செய்து வருகிறான் தெரியுமா? நம் ஊரைச்சுற்றி உப்பங்கழிகள் கடலைத் தழுவுவது போல் அருமையாக காட்சி தருகின்றன. அதை அடுத்து குளிர்ந்த வானளாவிய மரங்களை உடைய சோலைகள். அந்தச் சோலையில் அன்னப் பறவைகள் தங்கள் அழகிய சிறகுகளை விரித்து ஆடிக்கொண்டு தம்முடைய பெட்டைகளோடு முயங்கித் திரிகின்றன. இப்படிப்பட்ட அழகிய நம் ஊரை அவன் விரும்பி இருப்பது வியப்பல்லவே!
வியரிலங்குவரை யுந்தியதோள்களை
வீரம்விளை வித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென
துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்கும்உல கிற்பலஊழிகள்
தோன்றும்பொழு தெல்லாம்
பெயரிலங்கு பிரமாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. (8)
தாணுதல் செய்திறை காணியமாலொடு
தண்டாமரை யானும்
நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென
துள்ளங்கவர் கள்வன்
வாணுதல் செய்மகளீர்
முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல் செய்பிரமாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. (9)
புத்தரோடுபொறி யில்சமணும்புறங்
கூறநெறி நில்லா
ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென
துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர்
மாயம்இது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. (10)
அருநெறியமறை வல்லமுனியகன்
பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரம்மேவிய
பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம்
பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை
தீர்தல்எளி தாமே. (11)
More Stories
திருவாசகம் முற்றோதல்
1008 சிவன் போற்றி