April 5, 2025

32. சாக்கிய நாயனார்

திருச்சங்கமங்கை என்ற ஊரில் வேளண் குலத்தில் பிறந்தார் சாக்கியர். கல்வி கேள்விகளில் சிறந்தார். எல்லா உயிர்களிடத்தும் அன்புடையவராயிருந்தார். எங்கே இருந்து வந்தேன், எங்கே போகிறேன், பிறப்பு, இறப்பு ஆகியவைகள் உள்ளத்தை குடைந்தன. சாதலையும் பிறத்தலையும் தவிர்க்க நினைத்தார். காஞ்சிநகர் சென்றார். நன்கு கற்றறிந்து அறிஞர் ஆனார். ஈர்ப்பால் சாக்கியமதத்தைச் சார்ந்தார். பின்னர் சிவநெறியே உயர்ந்தது எனச் சிந்தைக் கொண்டார். புறத்தே சிவ வேடம் மேற்கொள்ளவில்லை. சிவலிங்க வழிபாடு சிறந்தது. தெளிந்தது சாக்கியர் உள்ளம்.

தினமும் சிவலிங்கத்தைக் கண்டபின்னரே உணவு உண்பார். ஒர்நாள் வழியில் ஓர் சிவலிங்கம் இருக்க கண்டர். வழிபட நினைத்தார். மலர்கள் இல்லை. அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து மலராக நினைத்து போட்டார், இறைவனும் கல்லை மலராக்கி ஏற்றுக்கொண்டார். அடுத்தநாள் அங்கு வந்தவர் முதல் நாள் நான் ஏன் அப்படி நடந்தேன். ஈசன் செயல். அதேபோல் இன்றும் செய்வேன் என மீண்டும் செங்கல்லால் பூஜித்தர். அன்பு நெறியால் தொண்டர்கள் செய்யும் செயல் இறைவனுக்கு உகந்த பூசையாகிறது.

ஒருநாள் சாக்கியர் அச்செயலை மறந்து உணவு உண்ண ஆயத்தமான போது ‘இன்று எம் பெருமானைக் கல்லால் எறிய மறந்துவிட்டேன்’ என்று விரைந்தோடிச் சிவலிங்கத்தின் முன்சென்று ஆராத வேட்கையால் ஒரு கல்லை எடுத்து அதன்மேல் எறிந்தார். அவரது அன்பிற்கு உவந்த சிவபெருமான் விடைமீது உமையம்மையாருடன் தோன்றி அருளினார். அத்தெய்வக்காட்சியைக் கண்ட சாக்கிய நாயனார், தலைமேல் இருகைகளையும் குவித்து நிலமிசை வீழ்ந்திறைஞ்சினார். சிவபெருமான் சிவலோகத்தில் தம்பக்கத்தேயிருக்கும் பெருஞ்சிறப்பினை அவர்க்கு அருளினார்.

இறைவன்: ஏகாம்பரேஸ்வரர்


இறைவி : ஏலவார்குழலி


தலமரம் : மா


தீர்த்தம் : சிவகங்கை


குலம் : வேளாளர்


அவதாரத் தலம் : திருச்சங்கமங்கை


முக்தி தலம் : திருச்சங்கமங்கை


செய்த தொண்டு : சிவ வழிபாடு


குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : மார்கழி – பூராடம்


முகவரி : அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் – 631502. காஞ்சிபுரம் மாவட்டம்.